தமிழில் மானிடவியல்

சமூகம் மற்றும் சமூக வாழ்க்கை என்பது உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே உள்ள தனித்துவமான நடைமுறை ஆகும். மானிடவியல் எனும் அறிவுப்புலம் மனித இனத்தின் தனித்துவமான பண்பாடு எனும் கருத்தாக்கத்தினையும் அதன் இயக்கவிசையே குறிப்பிட்ட அச்சமூகத்தின் வாழ்க்கை முறை என்றும் வரையறுக்கிறது. சமூக அமைப்பு, சமூக உட்பிரிவுகள், சமூக நிறுவனங்கள், சமூக நெறிமுறைகள், பண்பாட்டு விழுமியங்கள், கலைத்திறன், கலையுணர்வு என இவையாவும் சமூக வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளாக அமைகின்றன. சமூகம் என்பது என்ன? அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது? அதன் நடைமுறைச் செயல்பாடுகள் யாவை? அச்செயல்பாடுகள் ஏன் தொடர்மாற்றங்களுக்கு உட்படுகின்றன? பண்பாட்டு பன்மையம் (diversity) ஏன்? பன்மையத்தை ஏன் போற்ற வேண்டும்? உயிரியல் பன்மையத்துடன் இதன் ஊடறுப்பு, சமூகத்தில் நிலவும் பாலின வேற்றுமைகள்/சமத்துவம் ஏன்? போன்ற கேள்விகளுக்கு பதில் அறிவதற்கான ஆர்வம் மனித மனத்திற்கு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கிறது. அந்த ஆர்வத்திற்கான விளக்கங்களை, அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மூலம் திண்ணியமான முடிவுகளை முறைப்படி கண்டறிவதற்கான முயற்சியே மானிடவியல். இந்த அறிவுப்புலம் மேற்கத்திய நாடுகளில் தோன்றி ஏறக்குறைய இரண்டரை நூற்றாண்டுகள் ஆயினும் தமிழில் இதன் அறிமுகம் மிகச் சொற்ப அளவே நிகழ்ந்திருக்கிறது. இன்று மானிடவியலின் பங்களிப்பும், பயன்பாடும் அடிப்படையில் மனிதச் சமூக செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது, சமூகம், நிலைத்த மேம்பாடு அதற்கான தொழில் நுட்பம், சமூகத்தின் மீள்திறன், பின் நவீனத்துவம், காலனிய நீக்கம், பேரிடர் மேலாண்மை, என எல்லா நிலைகளிலும் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் இன்றைக்கு வளர்ந்துவரும் அதி நவீன தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவு துறையிலும் மனித மாண்போடு கூடிய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு குறித்து மானிடவியலாளர்கள் தங்கள் பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். இத்தகையைச் சூழலில்தான் தமிழில் மானிடவியலை எழுத்துவதற்கான இந்த முயற்சி.

தமிழில் மானிடவியல் என்பது பெரும் பணி, அந்த இடத்தை இட்டு நிரப்புவது பெரும் சவால், இதற்கு ஆய்வாளர்களின் தொடர் பங்களிப்பும் கூட்டு முயற்சியும் அவசியம். தேவைக்கேற்ப பல்துறைகளின் கருத்தாக்கங்களும், ஆய்வுமுறைகளும் ஒன்றிணைத்து செய்யும் துறையிடை ஆய்வு முறையின் பலன் என்பது ஆய்வு முடிவுகள் ஆழமான புரிதலை எட்ட வழி வகை செய்கிறது. எனவே பல்துறை சார்ந்த ஆய்வாளர்களின் கூட்டு முயற்சி ஆய்வின் தரத்தினைக் கூட்டும். தமிழ் மானிடவியல் என்கிற அரையாண்டு இணைய இதழை தமிழில் வெளியிடுவதில் மூலம் ஆய்வாளர்களிடையே கருத்து பரிமாற்றத்திற்கு இது ஒரு தளமாக இருக்கும்.